Thursday, January 9, 2014

இஸ்கான் – Iskcon

பெங்களூரின் சிறந்த வணிகத்தலங்களுள் (shopping mall) ஒன்று.





என் இறுதியாண்டு கல்லுரி படிப்பின் படி, ஏதேனும் ஒரு ப்ராஜெக்ட் செய்ய வேண்டும். சுயமாகவும் செய்யலாம் அல்லது ஒரு நல்ல அங்கீகரிக்கப்பட நிறுவனத்தின் மேற்பார்வையிலும் செய்யலாம். அனுபவத்திற்காக நானும் என் நண்பர்கள் Gokul Sachaமற்றும் Aravindh Kumar ம் பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் செய்ய முடிவெடுத்து அனுமதியும் பெற்றோம்.

அனுமதி கிடைத்ததும் உள்ளுக்குள் ஒரே குழி அதுவும் அலுவல் நேரம் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை தான் என்றவுடன். அப்பாடா மிச்சம் இருக்கும் நேரத்தில் பெங்களூரை நல்லா சுற்றிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். சுற்றி பார்க்க என்ன என்ன இடம்லாம் இருக்குனு விக்கிபீடியா மற்றும் வலைதளங்களில் தேடி இடங்களை குறித்து வைத்துகொண்டோம். அப்படி முக்கியமான இடங்கள் என்று குறித்தவற்றில் இஸ்கான் கிருஷ்ணர் கோவிலும் ஒன்று (எனக்கு கோகுல நாயகனின் மீது தீரா பற்று).

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையிலையே மர்தஹல்லியில் ரூபாய் 60 டிக்கெட் (daily pass) வாங்கிட்டு இஸ்கான் புறப்பட ஆனோம், 10 மணியளவில் இஸ்கான் சென்றடைந்தோம். உள்ளே போகும் போதே ஒரு அவா, அட உலக அளவில் பகவானின் திருநாமத்தை பரவ செய்த அமைப்பினுடைய கோவிலாச்சே, நல்லா பக்தி மனம் கமழும் ஒரு சாந்தம் கிடைக்கும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன் !!!

நுழைவு வாயிலிலே கால் அலம்பும் வசதி இருந்தது, கால் அலம்பிட்டு உள்ளே சென்றால் ஒரு பெரிய விசாலமான இடம், முழுவதும் மழ மழனு இழைச்சு வச்சுருந்தாங்க (என்னதான் மழ மழனு இருந்தாலும் கருங்கல்லில் எழும்பியிருக்கும் கோவிலில் கால் வைத்தவுடன் வரும் பக்தி பரவசம் கிடைபதில்லை). ருக்மனிதேவியுடன் கிருஷ்ணர் நின்ற கோலத்தில் தரிசனம், நல்ல அலங்காரம் பக்கத்திலே பலராமர். சேவித்து விட்டு நகரும்பொழுதே சில அடிகளில் பல மொழிகளில் பகவத்கீதை விற்கும் கடை (கொஞ்சமாவது தள்ளி வைத்திருக்கலாம்) அதை விடுத்து கிருஷ்ணரின் எதிரிலே சிறிது நேரம் அமர்ந்தோம்.

சரி கிளம்பலாம்னு என்று வெளிய போகும் வழியை தேடி போனால் அது கீழே அடி தளத்திற்கு இட்டு சென்றது. போகும் வழியிலே ஒரு இனிப்புக் கடை அதை பலர் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழி அப்படியே வளைந்து வளைந்து நிறைய கடைகளுக்கு கூட்டி சென்றது. அந்த கடைகளில் இல்லாத பொருட்களே இல்லை எனலாம், கிருஷ்ணர் படம் போட்ட பனியன் , சட்டை, பைஜாமா, குர்தானு பெரியவங்க, சிரியவங்க, பெண்கள்னு எல்லாருக்கும் இருக்கு எல்லாத்தையும் வாங்க நிறைய கூட்டம், சாமி கும்பிட எடுத்துகிட்ட நேரத்தை விட அதிகமா செலவு செய்து தங்களுக்காண சரியான அளவுள்ள ஆடைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தார்கள். அதை தாண்டி வந்தா நோட்டு, புத்தகம், பேனா, pen drive, புல்லாங்குழல்னு பல வகை பொருட்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைகிறது.

அப்படியே வந்துட்டு இருந்தா அப்புறம் வருவது உணவகங்கள் மற்றும் இனிப்பு பகுதி. இங்க உங்களுக்கு கிடைக்காத இனிப்பு வகைகளே இல்லை எனலாம். எல்லாம் அதிக விலை தான். இது ஒரு நீண்ட பிரிவு நல்லா நிதானமா எல்லாத்தையும் ருசி பார்கிறார்கள். அதையும் தாண்டி போகும் பொது தான் ஒரு அறிவிப்பு பலகை வெளியே செல்லும் வழினு போட்டிருந்துச்சு. அப்பதான் சட்டுன்னு நினைவே வந்தது, “நாம இதுவரை கோவிலில் தான் இருந்தோம் என்றே”.

அதாவது இஸ்கானின் மொத்த அமைப்பே ஒரு கல்யாண மண்டபம் மாதிரி தான் எனக்கு தோன்றியது. அதாவது மேல கல்யாணம் முடிஞ்சு அப்படியே கீழ சாப்பிட போவாங்களே அது மாதிரி தான். என்ன கல்யாண மண்டபத்திலாவது மேல பெருசாவும், கீழ சாப்பிடும் இடம் சிறுசாவும் இருக்கும். இங்க அப்படியே தலைகீழ். இதையெல்லாம் பார்த்தவுடன் எனக்கு இஸ்கானின் இலக்கு கிருஷ்ண நாமத்தை பரப்புவதா இல்லை பெரு வணிக நிறுவனங்களுக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்யதா என்றே புரிய வில்லை.

பெங்களூரில் நான் நிறைய வணிகதலங்க்களுக்கு சென்று வந்தேன். அப்பொழுது கிருஸ்துமஸ் நேரம் என்பதால் எல்லா வளாகங்களும் ஒரு இடத்தில சிறிதும் பெரியதுமாக கிறிஸ்துமஸ் குடில் அமைத்து அலங்காரப் படுத்தியிருந்தார்கள். இஸ்கான் இவர்களிடம் இருந்து வேறுபடுவது ஒரே விசியத்தில் தான், அவங்க கிறிஸ்துமஸ் முடிந்ததும் குடிலின் அலங்காரங்களை கலைத்து குடிலை அகற்றி விடுவார்கள் ஆனால் இவர்களோ கிருஷ்ண ஜெயந்தி முடிந்தாலும் கிருஷ்ணரை அகற்றாமல் அலங்காரங்களை தொடர்கிறார்கள் ( பின்ன கூட்டம் கூடுதுல ).

மொத்தத்தில் இஸ்கானுக்கு ஒருநாளின் பாதியை ஒதுக்கியதில் ஏமாற்றமே மிச்சம்.

இவன்
--- - கிருஷ்ண பக்தன்
 —

No comments:

Post a Comment